வசதி
படைத்த குடும்பத்தில்
பிறந்திருந்தாலும்
தனது பன்னிரண்டாவது
வயதில் சுனாமி
என்னும் பேரலைக்குப்
பெற்றோரைப் பறிகொடுத்த
சிறுவர்களில்
நிர்மலனும் ஒருவன்.
அவனது அதிர்ஷ்டம்
வெளியூர் சென்றிருந்த
பாட்டி சுனாமிப்
பேரலைக்கு அகப்படாமல்
தப்பி இருந்தார்.
இயற்கையின் கோரத்தால்
அனாதையாக்கப்பட்ட
சிறுவர்களைப்
பார்க்கும் போதெல்லாம்
தனக்கெனப் பாட்டியையாவது
விட்ட ஆண்டவனுக்கு
நன்றி சொல்லிக்
கொள்வான். ஏல்லோரைப்
போலவும் தமக்கென
ஒதுக்கப்பட்ட
தற்காலிக தங்கு
முகாமில் இருந்தபடி
பாடசாலை சென்று
வந்தான்.
நிர்மலனுடன்
கூடப்படிக்கும்
மாணவன்தான் வியூரன்.
ஊரிலேயே வசதியான
குடும்பம் சிறுவனாக
இருந்தாலும் மற்றவர்களைக்
கேலியும், கிண்டலும்
செய்தபடி இருப்பான்.
அவனது செயலுக்கு
நிர்மலனும் தப்பவில்லை.
நிர்மலனின் தற்போதைய
ஏழ்மையையிட்டு
வியூரன் கேலி செய்தபடி
இருப்பான். ஏற்கனவே
பெற்றோர், வசதியான
வாழ்க்கை, சொந்தங்கள்
அனைத்தையும் பறிகொடுத்த
நிர்மலனின் மனம்
வியூரனின் நடவடிக்கையால்
மேலும் நொந்து
புண்பட்டது. அன்றும்
வாடிய முகத்துடன்
பாடசாலை விட்டு
வரும் பேரனைப்
பார்த்த பாட்டி
“என்னப்பா ஏன்
உன் முகம் வாடி
இருக்கு?” என்று
கேட்கவும் நிர்மலன்
ஒன்றுமில்லைப்
பாட்டி என்றான்.
பாட்டியும்
விடாமல் என்னென்றாலும்
பரவாயில்லை சொல்லு
என்று கேட்க அழுதபடியே
வியூரனைப் பற்றிக்
கூறினான் நிர்மலன்.
அதைக்கேட்ட பாட்டி
சிரித்தபடியே
ஒரு கதை சொன்னார்
நிர்மலனுக்கு.
கோயில் யானை ஒன்று
நன்றாகக் குளித்துவிட்டு
நெற்றியில் பட்டை
தீட்டிக்கொண்டு
சாந்தமாக சுத்தமாக
வந்து கொண்டிருந்தது.
ஓர் ஒடுக்கமான
பாலத்தில் அது
வரும்போது எதிரே
சேற்றில் குளித்துவிட்டு
ஓர் பன்றி வாலை
ஆட்டிக்கொண்டே
வந்ததாம். இதைக்கண்ட
யானை ஓர் ஓரமாக
ஒதுங்கி நின்று
அதற்கு வழிவிட்டது.
அந்தப்பன்றி எதிரே
இருந்த இன்னொரு
பன்றியைப் பார்த்து
“பார்த்தாயா அந்த
யானை என்னைக் கண்டு
பயந்துவிட்டது”
என்று சொல்லிச்
சிரித்தது. அந்த
யானையைப் பார்த்து
இன்னொரு யானை
“அப்படியா நீ பயந்துவிட்டாயா?”
என்று கேட்டது.
ஆதற்குக் கோயில்
யானை, “நான் சுத்தமாக
இருக்கிறேன் பன்றியின்
சேறு என்மேல் விழுந்துவிடக்
கூடாதே என்று ஒதுங்கினேன்;
நான் ஏறி மிதித்தால்
பன்றி துவம்சமாகி
விடும்; என்கால்கள்
அல்லவா சேறாகி
விடும்” என்று
கூறியது.
எவ்வளவுதான்
உயர்ந்து வளர்ந்த
தென்னை மரமென்றாலும்
காற்றிற்கு விழுந்தால்
அதனால் மீண்டும்
எழுந்து நிற்கவே
முடியாது. ஆனால்
நாணலோ காற்றிற்கு
வளைந்தாலும் பின்னர்
பழையபடி நிமிர்ந்து
நிற்கும். எனவே
எவரொருவர் நான்
தான் என்ற ஆணவத்துடன்
இருப்பார்களானால்
அவர்களைக் கண்டு
அடக்கத்துடன்
நாம் ஒதுங்கிவிட
வேண்டும். நீ இவற்றையெல்லாம்
பெரிதுபடுத்தாமல்
நன்றாகப் படித்தாயானால்
எல்லோரும் உன்னிடம்
அன்பு பாராட்டுவார்கள்
என்று பாட்டி கூறினார்.
பாட்டி இவ்வாறு
சொல்லி முடித்ததும்
எல்லாம் புரிந்தவனாய்
அன்புப் பேரன்
நிர்மலன் பாட்டியைக்
கட்டித்தழுவிக்
கொண்டான். மறுநாள்
பாடசாலையில் பரீட்சை
முடிவுகள் வெளியாகி
இருந்தன. இம்முறை
நிர்மலனே முதலாவதாக
வந்திருந்தான்.
சுனாமிப் பேரலையின்
தாக்கம், புதிய
பாடசாலை, புதிய
சூழல் என்று இருந்தாலும்
நிர்மலன் தனது
அறிவுத்திறனை
வெளிப்படுத்திப்
பாடசாலையில் முதலாவதாக
வந்ததையிட்டு
ஆசிரியர்களும்
மாணவர்களும் நிர்மலனைப்
பாராட்டினார்கள்.
இவற்றை
எல்லாம் ஒரு ஓரமாக
நின்று பார்த்துக்கொண்டிருந்த
வியூரனுக்கு நாம்
எவ்வளவு தான் வசதி
படைத்தவர்களாக
இருந்தாலும் ஒருவருக்கு
கல்வி தேடித்தருகின்ற
அழகே அழகு என்று
புரியத் தொடங்கியது.
மெதுவாக நிர்மலனிற்கு
அருகில் சென்று
அவனது கையை அன்புடன்
பற்றிக்கொண்டான்.
தன்னை மன்னித்துக்கொள்ளும்படி
கேட்பதாக இருந்தது
அந்தப் பற்றுதல்.
அதன்பின் இருவரும்
உற்ற நண்பர்களாகி
நிர்மலனிடம் தனக்கு
தெரியாதவற்றைக்
கேட்டுப் படிக்கவும்
தொடங்கிவிட்டான்
வியூரன்.