பொங்கலோ பொங்கல் - உமேஷ் ஈஸ்வரபட்சம்

ஆங்கில புது வருடம் பிறக்கின்றது என்றாலே தமிழ் பேசும் சைவ சமய மக்கள் தை பிறக்கப்போகிறது என்று ஆவலுடன் இருப்பர். தை முதலாம் நாள் தான் நம் தைப்பொங்கல் திருநாளாகும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நாம் எல்லோரும் சொல்வதுண்டு.

யாழ்ப்பாணத்தில் எங்கள் வீட்டில் நடு முற்றம் என்று அழைக்கப்படும் முற்றம்  இருக்கிறது. அது தைப்பொங்கலுக்கு எங்களுக்கு முக்கியமான இடமாகும். அதி தான் நாம் கோலம் போட்டு பொங்கல் பொங்குவோம்.

புதுப்பானையில் மஞ்சள், இஞ்சி இலை கட்டி நீர் ஊற்றி பசுப்பால் சேர்த்து அடுப்பில் ஏற்றி கொதிக்க விடுவோம். நீர் கொதித்து பொங்கி வழியும் போது வழியும் திசை கிழக்கென்றால் சிறப்பு என்று எனது பூட்டனார் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருப்பாராம். குடும்பத்தலைவன் புதிதாக அறுவடை செய்த நெல்லைக் குற்றி வந்த அரிசியை  கொதித்த உலையில் இடுவார். இத்துடன் சர்க்கரை, தேங்காய்ப்பால், முந்திரிகை, கஜு, பயறு, ஏலக்காய் போட்டு பொங்கல் பொங்குவோம். சிறுவர்கள் நாம் பட்டாசு கொழுத்தி மகிழ்வோம்.

பொங்கி முடிந்ததும் பொங்கல், பழங்கள்  ஆகியவற்றை கதிரவனுக்கு படைத்து வணங்குவோம். அதன் பின்னர் நாம் எல்லோரும் வாழை இலையில் பொங்கல் பரிமாறி உண்டு மகிழ்வோம்.