சாடிகளில் மரக்கறிச் செய்கை – இ.ஈஸ்வரபட்சம்

 

நியூசிலாந்து போன்ற நாடுகளில் வசிக்கும் நாம் நம் வீட்டில் நில வசதி போதாது என்றோ அல்லது நிலம் பூராவும் சீமெந்து போடப்பட்டுள்ளது என்றோ கவலைப்படாது நாம் நமது தேவைக்கு ஏற்ப மரக்கறி வகைகளை சாடிகளில் பயிர் செய்து கொள்ளலாம். இதனால் கடைகளில் பொலித்தீன் பைகளில் அடைத்து கூடிய விலைகளில் விற்கும் மரக்கறிகளை வாங்காது அன்றாட தேவைக்கு ஏற்ப நம் வீட்டிலேயே பெற்றுக்கொள்ளலாம்.

பீட்றூட், கோவா, கரட், லீக்ஸ், லெற்யூஸ், மிளகாய், கறிமிளகாய், கீரை, தக்காளி போன்ற மரக்கறிகளை சாடிகளில் வளர்க்கலாம்.

மேற்கூறிய பயிர்கள் எல்லாம் 2-2½ மாத வயதுடையவை. ஆனால் பீட்றூட், கரட், லெற்றூஸ், கீரை (spinach) ஆகியவற்றை குறிப்பிட்ட காலம் வர முதல், அதாவது பிஞ்சாகவே அறுவடை செய்யலாம். இதனால் பயிர்களின் உற்பத்தித்திறன் உயரும். மரக்கறி நாற்றுக்களை வீட்டில் விதைகளைப் போட்டு உண்டாக்குவதை விட கடைகளில் நாற்றுகளை வாங்கி நடுவது இலகுவானதாகும். ஏனெனில் விதை போட்டு நாற்று தகுந்த பருவம் வரும் வரை தக்க பாதுகாப்பு வழங்க வேண்டி இருக்கும்.

சாடிகளின் பருமன் 13-15 cm அளவாக இருத்தல் வேண்டும். அதற்கான ஊடகமாக கூட்டெரு (compost)  பாவிக்க வேண்டும். கோடை காலத்தில் நாற்று நடுதல் மாலைப்பொழுதில் செய்தால் நாற்று உலர்வதை தடுக்கலாம்.

நிலத்தில் இருப்பதை விட சாடிகளில் மண் உலருவது அதிகமாக இருக்குமாதலால் காலை மாலைகளில் அவதானித்து தேவைக்கேற்ப நீர் ஊற்ற வேண்டும். களைகளை கைகளால் பிடுங்கி அகற்றுவதாலும், பூச்சி புழுக்களின் தாக்கம் இருந்தால் பூச்சி புழுக்களை பொறுக்கி எடுப்பதாலும்  இரசாயனக் கலப்பற்ற காய்கறிகளைப் பெறலாம்.

 

இ.ஈஸ்வரபட்சம் : ஒரு விவசாய விஞ்ஞான பட்டதாரியான திரு.இ.ஈஸ்வரபட்சம் அவர்கள்  பயிராக்கவியல் (agronomy), மண்ணியல் (soil science) ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.