திருவெம்பாவையும் திருப்பாவையும் - திருமதி கனகா கணேசமூர்த்தி

 

மார்கழி மாதத்தில் விடியற்காலையில் இளம் பெண்கள் ஒருவரை ஒருவர் எழுப்பி, கூட்டமாய் கூடிக் குளத்தில் நீராடி, பாவை வைத்து வழிபாடு நடத்துதல் பாவை விரதம் ஏனப்படுகிறது. இப்பாவை விரதமானது மழை பெய்து நாடு நலம் பெறவும், தமக்கு நல்லபடி திருமணம் நடைபெறவும் பெண்களால் அனுஷ்டிக்கப்படுவது பழங்கால வழக்கம். இந்த விரதம் பற்றி இந்துக்களின் வழிபாட்டில் சிவனைத் தலைவனாக வைத்து மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடியுள்ளார். ஆண்டாள் திருப்பாவை பாடியுள்ளார்.

 

திருவெம்பாவையில் 20 பாட்டுக்கள் இருக்கின்றன. ஓவ்வொன்றும் எம்பாவாய் என்று முடியும். பெண்கள் ஒருவரையொருவர் எழுப்புவதும் எல்லாரும் சேர்ந்து குளத்தில் நீராடுவதும் அழகாகக் காட்சியாக்கப்பட்டிருக்கிறது. ஆன்மா தன்னைப் பீடித்துள்ள மாயையிலிருந்து விடுபட்டு இறைவனையடைய முயற்சிப்பதை விளக்குவதாகவும் திருவெம்பாவை பற்றி ஒரு கருத்து வழங்குகிறது. பக்தியைப் பெண்களிடையே பலவிதங்களில் மிக இயல்பாகப் புகுத்தியிருக்கிறார் மாணிக்கவாசகர். இவற்றுள் விடியற்காலையில் நீராடும்போது பாடுவதாக அமைந்துள்ளது திருவெம்பாவை.

 

“மலவிருளுற்றுறங்காமல் மன்னு பரிபாகரருள் செலமுழுக வருகவெனச்செப்பல் திருவெம்பாவை” என்று திருப்பெருந்துறைப் புராணத்தில் திருவெம்பாவை பற்றிக் கூறப்படுகிறது. மும்மலங்களாற் பீடிக்கப்பட்டுச் சுயநினைவிழந்து உறக்க நிலையில் இருக்கும் ஆன்மாவைத் தட்டி எழுப்பி இறையருளைப்பெற வருக என அழைப்பதாக அமைகிறது திருவெம்பாவை. இறைவன் அருளை நான் பாடக் கேட்டும் கேளாதது போல் உறங்குகிறாயா? என்று பெண்ணொருத்தி தன் சிநேகிதியைக் கேட்கிறாள். “ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன் செவியோ நின் செவிதான்”…. என்று கேட்பது போலப் பாடல் தொடங்குகிறது. மாணிக்கவாசகர் பெண்களின் மன நிலையை மிக நுட்பமாக அவதானித்துப் பக்தியையும் சேர்த்துப் பாடலாக்கியுள்ளார்.

 

“பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம் பேசும் போது. இப்போது ஆர்அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய்”?....... என்று ஒருத்தி இன்னொருத்தியின் வீட்டு வாசலில் நின்று கேட்கிறாள். இரவும்பகலும் பரஞ்சோதி (சிவன்) மீது அளவில்லா அன்பு வைத்துள்ளதாகக் கூறுவாய். இப்போது நித்திரையின்மீது நேசம் வைத்தாயோ? என்று கேலி செய்கிறாள்.. முதல் எட்டுப் பாடல்களிலும் பெண்கள் ஒருவரை ஒருவர் எழுப்பி ஒன்றாகச் சேர்ந்து குளிக்கச் செல்லும் காட்சி வர்ணிக்கப்படுகிறது. அடுத்து எல்லோரும் கூடி இறையருளைப் பாடுகிறார்கள்.

 

முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம் பொருளே

பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே

உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்

உன்னடியார் தாழ் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்

அன்னவரே எங்கணவராவார் அவருகந்து

சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்

இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்

என்ன குறையும் இலோம் ஏலோரம்பாவாய்

 

எனக்கூறித் தமக்கு வேண்டியவற்றைக் கேட்கின்றார்கள். பக்தி என்னும் தண்ணீரில் பாவங்கள் கழுவப்படுகிறது. இதை இலக்கிய நயத்தோடு “ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன்” என்று வர்ணிக்கிறார். கடவுள் நம்பிக்கை, பக்தி, விரதங்கள் போன்ற மிகப்பெரிய விஷயங்களை மிக இலகுவாக மக்களிடையே புகுத்தி இருக்கிறார். முக்கியமாக இளம் வயதினரிடம் பக்தியைக் காண்பது கடினம். அவர்களுடைய பல சந்தேகங்களுக்குப் பதில்சொல்ல முடியாது. ஆனால் மணிவாசகரோ இளநெஞ்சங்களின் போக்கிலே சென்று மணிமணியான வாசகங்களின் மூலம் தன்கருத்தைச் சொல்லுகிறார்.

மழை பொழிய வேண்டுமென்று பெண்கள் பாடும்போது அவர்களின் உவமை கடவுளின் அருளுடன் ஒப்பிடப்படுகிறது. …”நந்தம்மை ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பற்கு முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப்பொழியாய் மழை ஏலோரெம்பாவாய்.” சிவனின் அன்பர்களுக்கு அன்னை சிவசக்தி தன்னருளை மழைபோலப் பொழிகிறாள். இதை அடியார் மாற்றிப்பாடுகிறார். அன்னை பொழியும் அருளைப் போலத் தடையின்றி பொழிவாய் மழையே என்கிறார். இவரது பாடல்களில் புராணக்கதைகள், பழமொழிகள் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன. உன்கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்பது பழமொழி.

“உங்கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று அங்கு அப்பழஞ்சொற் புதுக்கும் எம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கொன்றுரைப்போம் கேள்”……என்று தொடங்கி “இங்கிப்பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல் எங்கெழிலென் ஞாயிறு எமக்கு ஏலோரெம்பாவாய்” என்று முடிக்கிறார். மணிவாசகப்பெருமான் சிறந்த சிவபக்தர். இவரது திருவெம்பாவை சிறந்த பக்தி இலக்கியமாக மக்களிடையே பரவியுள்ளது. இப்பாடல்கள் அனைத்தும் மார்கழி மாதத்தில் கோயில்களில் பத்து நாட்கள் படிக்கப்படுகின்றன. பத்தாம் நாள் திருவாதிரை நட்சத்திரத்தில் விசேட பூசையுடன் திருவெம்பாவை நிறைவு பெறுகிறது.

 

திருப்பாவை நாயகன் திருமால். கிருஷ்ணனைப் பாடி விரதம் இருந்தாற் பெறக்கூடிய நன்மைகள், திருமாலின் பெருமை, மழைபொழியும் அழகு போன்றவற்றை ஆண்டாள் 30 பாடல்களிற் தருகிறார். ஆண்பிள்ளையாகிய மாணிக்கவாசகர் பெண்களைப்போல கற்பனை செய்து பாடிய திருவெம்பாவை, பெண்ணாகிய ஆண்டாள் தானே பிறரை எழுப்புவது போலப் பாடிய திருப்பாவையில் இருந்து சிறிது வேறுபடுகிறது. திருப்பாவையில் அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகள் தெளிவாக எடுத்துக்கூறப்படுகிறது. இருவரது நோக்கங்களும் ஒன்றாக இருந்தாலும் திருவெம்பாவையில் பக்தி அதிகமாகவும் திருப்பாவையில் இலக்கிய நயம் அதிகமாகவும் இருப்பதைக் காணுகிறோம்.

 

“மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்”.... என்று தோழியரைக் குளிக்க அழைப்பது போன்று தொடங்கி அன்றாடம் சிநேகிதிகளுடன் பேசுவது போலவே நடத்திச் செல்கிறார் ஆண்டாள். இரண்டாவது பாட்டில் விரதமிருக்கும் வழிமுறைகள் எடுத்துக்கூறப்படுகிறது.

 

வையத்து வாழ்வீர்காள், நாமும் நம் பாவைக்குச்

செய்யும் கிரிகைகள் கேட்டீரோ? பாற்கடலுள்

பையத் துயின்ற பரமன் அடி பாடி

நெய்யுண்ணோம், பாலுண்ணோம், நாட்காலை நீராடி

மையிட்டு எழுதோம், மலரிட்டு நாம் முடியோம்,

செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி

உய்யுமாறு எண்ணி உகந்தேலோரெம்பாவாய்

 

விரதம் என்றால் ஒருவருடைய அகமும் புறமும் சுத்தமாக்கல். அதாவது உடலின் உள்ளேயும் வெளியேயும் சுத்தப்படுத்தல். உடலின் உள்ளே என்பது ஆத்மசுத்தி. காலையில் நீராடல், எளிய உணவு, எளிய உடையலங்காரம் என்பன புறச்சுத்தமாகவும், பரமனடி பாடல், செய்யக்கூடாதவற்றைச் செய்யாதிருத்தல், பிறர் மனம் வருந்தும்படி பேசாதிருத்தல் என்பன அகச்சுத்தமாகவும் கொள்ளப்படுகிறது. இதை ஆண்டாள் எளிய தமிழில் எடுத்துக்கூறியிருக்கிறார். அடுத்ததாக இந்த நோன்பின் பயன் கூறப்படுகிறது. “ஓங்கி உலகளந்த உத்தமன் பெயர் பாடி நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து…. நீங்காத செல்வம் நிறைந்து ஏலோரெம்பாவாய்” என்கிறார். அடுத்து மழை எப்படிப் பொழியும் என்ற கற்பனை. காணுமிடமெல்லாம் திருமாலின் திருவுருவத்தையே கண்ட கோதை நாச்சியார் மழை பொழியும் அழகைப் பின்வருமாறு வர்ணிக்கிறார்.

 

ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள்புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி

ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்து

பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்

ஆழி போல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்கமுதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

 

மழை முகிலே நீ கடலிலே புகுந்து நீரை முகந்து எடுத்துக்கொண்டு ஆரவாரத்தோடு வானத்திலேறி, ஊழிமுதல்வனாகிய திருமாலின் நிறம்போலக் கறுத்து, அவனுடைய கையிலுள்ள சக்கரம்போல் மின்னி, சங்குபோல் அதிர்ந்து இடியிடித்து அவனுடைய வில்லிலிருந்து புறப்படும் அம்புகள் போலத்தடையின்றி சந்தோஷமாகப் பொழிவாயாக. நாங்களும் நீராடி மகிழவேண்டும் என்கிறார். போரிலே தொடர்ந்து அம்புகள் எய்யப்படுவதை “சரமாரி” என்று வர்ணிப்பது தமிழ்மரபு. மேற்கூறிய பாடலில் மட்டுமல்லாது பல இடங்களில் பாரதப் போரின் காட்சிகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. சில இடங்களில் இராவண வதமும் பெருமையாகக் கூறப்படுகிறது. பகைவரை அழிக்கும் திருமாலின் பண்பைப் பல இடங்களில் வியந்து பாராட்டுகிறார், கோதை நாச்சியார்.

 

“சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கினியானைப் பாடவும் நீ கேட்டிலையோ?”….என்றும் …. “பொல்லா அரக்கனைக் கிள்ளிக்களைந்தானை”.. என்றும் “அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி” என்றும் பல இடங்களில் குறிப்பிடுகிறார். இராவணின் ஆட்சி தென்னிலங்கையிலே தான் இருந்ததென்பதை இலங்கை என்று பொதுவாகச் சொல்லாமல் தென்னிலங்கை என்று விசேஷமாகக் கூறுவதன்மூலம் எடுத்துக்காட்டுகிறார்.

 

பெண்களை எழுப்பும் பாடல்கள் இயல்பாக ஒருத்தி மற்றொருத்தியுடன் பேசுவது போல அமைந்துள்ளது. இளம் பெண்களின் ஆசாபாசங்கள் அவர்கள் காலத்து நாகரீகமெல்லாம் பாடல்களிலே காணப்படுகிறது. “தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரியத் தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும் மாமன் மகளே மணிக்கதவம் தாள் திறவாய் மாமீர் அவளை எழுப்பீரோ? உன்மகள்தான் ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?.......... என்கிறார். அந்த காலத்தில் சுற்றும் விளக்கு இருந்திருக்கிறது. சாம்பிராணிப்புகை மெல்லிய நறுமணத்துடன் காற்றைச் சுத்திகரிக்கப் பஞ்சுமெத்தையிலே மக்கள் நித்திரை செய்திருக்கிறார்கள். ஏறத்தாள ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்த நாகரீகம் இது.

 

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் திருப்பாவையில் உள்ள அத்தனை பாடல்களையும் வரிவரியாகப் படித்துச் சுவைக்கவேண்டும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நமது அன்றாட வாழ்க்கையின் இறுக்கத்தில் இருந்து மீளும் சுலபமான வழி இதுவாகும். இந்த மார்கழி மாதத்தில் அனைவரும் திருப்பாவையையும், திருவெம்பாவையையும் படித்து இன்புறுவோமாக.